Tuesday, April 29, 2008

கருத்துச் சுதந்திரமா? ஆணவமா?

கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பரில், முஹம்மது நபி(ஸல்) அவர்களை கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் டென்மார்க்கிலிருந்து வெளிவரும் ஜீலன்ட்-போஸ்டன் பத்திரிக்கை 12 கேலிச் சித்திரங்களை வெளியிட்டது.
ஜீலன்ட் பத்திரிக்கை வெளியிட்ட 12 கேலிச்சித்திரங்களில் பதினொன்று நபி(ஸல்) அவர்களைப் பயங்கரவாதியாகவும் மற்றொன்று அவர்களைப் பாலியல் வாதியாகவும் சித்தரிக்கும் வகையில் வரையப்பட்டிருந்தன. துப்பாக்கி, வாள் ஆகியவைகள் பிடித்துக் கொண்டு இருப்பது போன்றும், அவர்கள் தலைப்பாகையில் வெடிகுண்டு இருப்பது போன்றும் கேலிச்சித்திரங்கள் வெளியாயின.
இக்கேலிச் சித்திரங்கள் வெளிவந்தது முதல் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் டென்மார்க் நாட்டிற்கும் ஜீலன்ட் பத்திரிக்கைக்கும், அதை வரைந்தவருக்கும் எதிராக எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. முஸ்லிம்கள் மட்டுமல்லாது மனிதப் பண்புடைய அனைவரும் உலகளவில் டென்மார்க் நாட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பின. எதிர்ப்புகள் வலுவடையவே அந்த பத்திரிக்கையின் வலைதளத்திலிருந்து 12 கேலிச்சித்திரங்களும் நீக்கப்பட்டன. எனினும் இன்று வரை அப்படங்கள் வெவ்வேறு வலைதளங்களில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
தற்போது அந்தக் கேலிச் சித்திரங்களையே மறுபடியும் செய்தியாக்கி வெளியிட்டு உலக முஸ்லிம்களின் மனதை காயப்படுத்தியுள்ளன.
கடந்த பிப்ரவரி 13, புதன் அன்று மீண்டும் இந்தக் கேலிச்சித்திரங்களை ஜீலன்ட், பெர்லின்கே (Berlingske Tidende) ஆகிய ஐரோப்பிய பத்திரிக்கைகள் வெளியிட்டன. இதனால் உலகெங்கும் மீண்டும் டென்மார்க்கிற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இஸ்லாத்தை இழிவுபடுத்துதல், திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை திரித்து எழுதுதல் போன்ற செயல்கள் தொன்று தொட்டு மேலைநாடுகள் இஸ்லாத்திற்கு எதிராக செய்துவரும் முயற்சிகள் ஆகும். இவர்களுக்கு நன்றாகத் தெரியும் இஸ்லாத்தில் உருவ வழிபாடு என்பதும் இல்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் உருவமாக வரைந்தால் இஸ்லாமியர்கள் மனம் புண்படும் அவர்கள் இக்காரியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். எனினும் அவர்களின் நோக்கம் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்த வேண்டும் என்பதேயாகும்.
கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் இத்தகைய ஆணவச் செயலை மீண்டும், மீண்டும் டென்மார்க் புரிந்து வருகின்றது. உலக முஸ்லிம்கள் மற்றும் மனிதப் பண்புள்ள அனைவரும் டென்மார்க்கின் இத்தகைய செயலுக்குக் கடின எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவிக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் டென்மார்க் வீழ்ச்சியடைய அவர்களின் தயாரிப்புகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
விசுவாசங்கொண்டோரே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள், (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்களில் சிலர், சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர், உங்களில் எவரேனும் அவர்களை(த் தனக்கு)ப் பாதுகாவலராக்கிக் கொண்டால், அப்போது நிச்சயமாக அவரும் அவர்களில் உள்ளவர்தாம், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார சமூகத்தார்க்கு நேர்வழி காட்ட மாட்டான்’. (திருக்குர்ஆன் 5:51)

குற்றங்களின் எண்ணிக்கை

ஏப்ரல்-28, 2008 அரப் நியூஸ் நாளிதழ் தெரிவிக்கும் செய்திக் குறிப்பு, கடந்த மூன்று மாதங்களில் மக்கா ரோந்துக் காவல் துறையினரால் 8,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது கடந்த ஜனவரி 10 முதல் ஏப்ரல் 21ஆம் தேதிவரை மக்காவைச் சார்ந்த ரோந்துக் காவல்துறையினர் 8,068 பேரை பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்துள்ளனர். இதில் 6,508 எட்டுபேர் பல்வேறு குற்றங்களில் ஈடுபடடுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 489 பேர் கொள்ளை மற்றும் திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள், 676 பேர் சரியான இகாமா இல்லாதவர்கள் மற்றும் அவர்களின் ஸ்பான்சர்களிடமிருந்து ஓடி வந்தவர்கள். 250 பேர் போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள், 126 பேர் ஏற்கனவே செய்த தவறுகளுக்காக காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தவர்கள். இச் சம்பவங்களின் போது ரோந்துக் காவல்துறையினர் 10 கைத் துப்பாக்கிகளும், 457 துப்பாக்கிக் குண்டுகளும், இரண்டு இயந்திரத் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 1825 போதை மாத்திரைகள் மற்றும் 100 கிலோகிராம் போதைப் பொருட்களையும் கைப்பற்றியிருக்கின்றனர். இத்தகைய குற்றங்கள் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட 6,437 வாகனங்களும் கைப்பற்றியிருக்கின்றனர்.

Sunday, April 27, 2008

ஜித்தாவில் “யூசுப் எஸ்ட்” – இஸ்லாமிய நிகழ்ச்சித் தொகுப்பு

இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதிலும் அதிக மக்களால் படிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அமெரிக்க நாட்டில் பல ஆண்களாலும் பெண்களாலும் இஸ்லாம் படிக்கப்பட்டும் பரப்பப்பட்டும் வருகின்றது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து சவூதி அரேபியாவிற்கு பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் யூசுப் எஸ்ட் அவர்கள் வருகை புரிந்தார்கள். ஜித்தாவிலுள்ள சவூதி ஜெர்மன் மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஸ்லாமிய நிகழ்சியில் யூசுப் எஸ்ட் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்பொழுது அவர்கள் அமெரிக்காவில் அழைப்புப்பணிகளின் நிலைபற்றி சுட்டிக்காட்டினார். மேலும் முஸ்லிம்களின் மீதுள்ள மிகப்பெரிய பொறுப்பாகிய ‘இஸ்லாத்தை தங்களோடு இருப்பவர்கள் மத்தியில் எடுத்துரைப்பது’ மற்றும் அவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்புவிடுப்பது பற்றியும் நினைவுபடுத்தினார்.
யூசுப் எஸ்ட் அவர்கள் ‘இஸ்லாத்தின் அழகு’ என்ற தலைப்பைத் தழுவி உரையாற்றினார். அவர் கூறியதாவது இஸ்லாத்தின் தனிப்பட்ட அழகு என்பது ‘மனிதனை அமைதியான நிலையில் வாழ வழிகாட்டியிருப்பது இஸ்லாம்’ ஆகும். மனிதனுக்கு மனமகிழ்ச்சி மற்றும் அமைதி என்பது வசதியோ, ஆடம்பரமோ ஒருபோதும் கொண்டு வந்து சேர்க்காது. மகிழ்ச்சி மற்றும் அமைதி எப்பொழுது கிடைக்கும் எனின் நாம் இறைவன் மீது தூய நம்பிக்கை வைத்தும் நல்ல செயல்கள் புரிவதன் மூலமே ஏற்படும், என யூசுப் எஸ்ட் அவர்கள் கூறினார். இஸ்லாத்தின் அழகானது ‘இறைவனுக்கு முற்றிலும் அடிபணிவது மற்றும் அவன் கட்டளைகளை முழுவதுமாக ஏற்று-நடப்பதே’ ஆகும்.
இறைவன் மீது நம்பிக்கை-கொண்டுள்ளவர்கள் தனக்கு நல்லவைகள் நிகழும்போது இறைவனுக்கு நன்றி கூறுபவர்களாகவும், தீயவைகள் நிகழும்போது பொறுமையுடையவர்களாகவும் இருக்க வேண்டும். நாம் அதிகம் நேசிக்கக் கூடியவர்களில் ஒருவருக்கு மரணம் நேரிட்டாலும், நாம் இறைவனிடத்திலிருந்து வந்தவர்கள் நாம் அனைவருமே அவனிடத்தில் திரும்பிச் செல்ல இருப்பவர்கள் என்று தம்மை அமைதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இதுவே இஸ்லாத்தின் அழகாகும்.
புனித நூலான திருக்குர்ஆனை உலகத்தில் உள்ள லட்சக்கணக்கானோர் முழுவதுமாக மனணம் செய்து வைத்திருக்கின்றனர். ‘வேறு எந்த புத்தகமும் பைபிள் உட்பட உலகத்தில் அதிகமானோர் மனனம் செய்து வைத்திருக்கவில்லை’ என்பதை எடுத்துரைத்தார்.
முஸ்லிம்கள் என்றால் ‘தீவிரவாதிகள்’, இஸ்லாமிய பள்ளிகளில் மாணவர்களுக்கு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கு பயிற்சி கொடுக்கிறார்கள் என்றெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்பட்டு வரும் பொய்ப்பிரச்சாரங்களை சுட்டிக்காட்டினார். தீவிரவாதிகளின் முதல் எதிரி முஸ்லிம்களே ஆவார்கள். இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்திற்கு துணை நிற்பதில்லை என்பதையும் யூசுப் எஸ்ட் அவர்கள் விளக்கப்படுத்தினார்.
அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொளளாமல் போவதற்குக் காரணம் அவர்ளிடம் இஸ்லாம் சரிவர எத்திவைக்கப்படவில்லை என்பதே ஆகும். இஸ்லாத்தை எடுத்துச் சொல்பவர்கள் யாரேனும் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறோமா? நாம் பிரார்த்திப்போம் “புஷ்ஷிற்கும் இஸ்லாத்தின் பக்கம் நேர்வழி காட்டு” என்று. இஸ்லாம் நமக்கு நேரான வழியைக் காட்டிக் கொடுத்திருக்கின்றது மற்றும் இந்த உலகத்திலுள்ள அறியாமைகளை விட்டும் விலக இஸ்லாம் வழிவகுத்துத் தந்துள்ளது. நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் ஏனெனில் இந்த உலகத்திலுள்ள 1.5 மில்லியன் முஸ்லிம்களுக்கு மத்தியில் நானும் முஸ்லிமாக வாழ இறைவன் வழிவகை செய்ததற்காக என்று யூசப் எஸ்ட் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
முஸ்லிம்கள் சோதிக்கப்படும் போது பொறுமை கொள்ள வேண்டும், அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கவில்லை இந்த உலகத்தில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களுக்கு சோதனைகள் எதுவும் வராது என்று. எனினும் நல்லவர்கள் சோதிக்கப்படும் போது பொறுமை கொண்டால் அதன் கூலியாக இறைவன் மறுமையில் வழங்கி கண்ணியப்படுத்துவான், என எஸ்ட் அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கினார்.
யூசுப் எஸ்ட் அவர்கள் அதே வளாகத்தில் “இன்றையை சமுதாயத்தில் முஸ்லிம் இளைஞர்கள்” என்ற தலைப்பின் கீழ் உரையாற்றும் போது குழந்தைகளுடன் பெற்றோர்கள் தங்களுடைய நேரத்தைச் செலவிடவேண்டும், என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார். பெற்றோர்கள் தங்கள் நேரங்களை குழந்தைகளுடன் கழிப்பதினால் குழந்தைகள் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்கின்றனர். அதேசமயம் குழந்தைகள் தனிமையில் இருக்கும் போது தவறான பழக்கங்ளை கற்றுக்கொள்வதைவிட்டும் தவிர்க்கப்படுகின்றனர்.
அதைத் தொடர்ந்து ஜித்தாவில் பல்வேறு பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார். இதே மேடையில் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த ஒரு சகோதரர் இஸ்லாத்தைக் ஏற்றுக்கொண்டார். இஸ்லாத்தில் சேர்ந்த அந்த சகோதரரை யூசுப் எஸ்ட் அவர்கள் “ஷஹாதா”வை (வணக்கத்திற்குறியவன் இறைவன் மட்டுமே! முஹம்மது(ஸல்) இறைவனின் திருத்தூதர் என்பதை) சொல்லித்தர பிலிப்பைன் சகோதரரும் மொழிந்தார்.
யூசுப் எஸ்ட் அவர்கள் 1991 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைப்புவிடுத்துக்கொண்டிருக்கும் அழைப்பாளர் ஆவார்.
அதைத்தொடர்ந்து இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையைச் சார்ந்தவரான ஹாமூத் அல்-ஷிமைம்ரி பேசுகையில் அழைப்புப்பணியின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவங்களை எடுத்துரைத்தார். “நாம் செய்யக்கூடிய அழைப்புப்பணியின் விளைவாக யாரேனும் ஒருவர் இஸ்லாத்தை தழுவினாலும் இந்த உலகத்தில் நாம் சாதித்த அனைத்தைவிடவும் சிறந்ததாகும் எனவும் அதைத்தொடர்ந்து திருக்குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியவை ஆகியவைகளைக் கூறி அழைப்புப் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த ஒரு சகோதரர் இஸ்லாத்தைக் கூறி அழைப்புவிடுத்ததன் காரணமாக 25 பிலிப்பைன் சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவக் காரணமாக இருந்தார், என்பதையும் ஹாமூத் அல்-ஷிமைம்ரி மேற்கோள் காட்டினார்.
அதைத் தொடர்ந்து ஜித்தா தஃவா சென்டரைச் சேர்ந்த ஷேக் முஹம்மது சூஃபி மற்றும் வாஜித் அக்காரி, அறிமுக உரையும், மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முஹம்மது அலி நன்றியுரையும் ஆற்றினர். இந்நிகழ்ச்சியை ஜித்தா தஃவா சென்டரும், இந்தியன் இஸ்லாஹி சென்டரும் இணைந்து நடத்தினர்.

Tuesday, January 1, 2008

சேதுவா? ராமரா?

தற்போது இந்திய அரசியலில் உருவெடுத்திருக்கும் மிகப்பெரும் பிரச்சினை “சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்” நிறைவேற்றப்படுமா? என்பதுதான். மதவெறி பிடித்த அமைப்புகளும், அரசியலில் சுய ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் கும்பல்களும் இணைந்து இல்லாத இராமர் பாலத்திற்காக இந்தியாவில் ஆங்காங்கே வன்முறைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
சேது சமுத்திரத்திட்டத்தில் ஒரு பகுதியில் அகற்றப்படும் சுண்ணாம்புப் பாறைகள் ராமர் கட்டிய பாலம் என்றும் அதை தேசியச் சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும் கருத்துக்களை வைக்கின்றனர். இத்திட்டம் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. சேது சமுத்திரத் திட்டம் என்பது என்ன? அதன் மூலம் ஏற்படப் போகும் பயன்கள் என்ன? அதற்கு தடையாக இருப்பவர்கள் யார்? என்பது பற்றிய சிறிய பார்வையே இக்கட்டுரை.
சேது சமுத்திரத் திட்டம்வங்கக்கடலில் அமைந்துள்ள துறைமுகங்களுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் வழியாக இலங்கையைச் சுற்றிதான் வருகின்றன. காரணம் இந்தியா மற்றும் இலங்கைக்கு நடுவில் அமைந்துள்ள கடல்பகுதியின் ஆழம் குறைவு என்பதே ஆகும். இப்பகுதியை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம். இத்திட்டம் நிறைவேறும் பொழுது கப்பல்கள் இந்தியப் பெருங்கடலிலிருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.
இத்திட்டம் 300 மீ அகலமும், 12 மீ ஆழமும் 167 கி.மீ நீளமும் கொண்டதாக செயல்படுத்தப்படுகிறது.
ராமர் பாலம்(?) 35 கி.மீ நீளத்திற்கும், பாக் நீரிணைப்பு பகுதியில் 54 கி.மீ நீளத்திற்கு மட்டும் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்படும். போதிய ஆழமுள்ள 78 கி.மீ ஆழப்படுத்தப்படமாட்டாது. 10 மீ மிதவை ஆழம் கொண்ட கப்பல்கள் இக்கால்வாய் வழி அனுமதிக்கப்படும். கால்வாயில் செல்லும் கப்பல்கள் 8 கடல் மைல் வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும். 33 மீ அகலமும் 215 மீ நீளமும் 30,000 டன் கொள்ளளவு கொண்ட கப்பல்கள் வரை இக்கால்வாயைப் பயன்படுத்தலாம்.
இதற்கான திட்டப்பணிகள் துவங்கி கடல் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இக் கடலில் அமைந்துள்ள சுண்ணாம்புப் பாறைகளை ராமர் கட்டிய பாலம் என்று சங் அமைப்புகளும், பா.ஜா.கவினரும் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும் எதிர்த்து வருகின்றன.திட்டத்தின் வரலாறு
1860- இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான ஏ.டி.டெய்லரின் சிந்தையில் திட்டம் கருக்கொள்கிறது. 1922- துறைமுகப் பொறியாளராக இருந்த சர்.ராபர்ட் ப்ரிஸ்ட்டோ திட்டத்தைப் பரிந்துரை செய்கிறார். 1955- ஜவகர்லால் நேரு நியமித்த, இராமசாமி முதலியார் தலைமையிலான “சேது சமுத்திரத் திட்டக் குழு” 998 லட்சம் ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கிறது. 1983- இந்திரா காந்தி நியமித்த லெட்சுமி நாராயணன் குழு 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கிறது. ஜூலை 2, 2005 - திட்டப்பணிகள் மன்மோகன் சிங் அவர்களால் மதுரையில் துவக்கி வைக்கப்படுகிறது.
பயன்கள்இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல் தூரம் வரை குறையும். கப்பல்களின் பயண நேரம் 30 மணிநேரம் வரை குறைய வாய்ப்பு. கணிசமான எரிபொருள் சேமிப்பு, அந்நியச் செலாவணி சேமிப்பு. கப்பல் வாடகைக் கட்டணத்தில் சேமிப்பு. இந்தியக் கடற்படையின் திறன் மேம்படும். கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கென ஒருங்கிணைப்புத் துறைமுகமாக மேம்படுத்தப்படும். தூத்துக்குடி துறைமுகமும், தமிழகத்தின் தென்மாவட்டங்களும் வளர்ச்சி பெறும்.
எதிர்ப்புகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிப் போதிய ஆய்வு நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு. அரியவகை கடல் உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம். ஆழிப்பேரலைகள் உருவாகும் பட்சத்தில் தாக்கம் அதிமாக இருக்கக்கூடும் என்கிற அபாயம். மீனினங்கள் இடம் பெயரும் என்கிற அபாயம். மீன்பிடிப்பு பகுதி குறையக்கூடும் என்ற மீனவர்களின் அச்சம். தோண்டப்படும் மணல் அப்புறப்படுத்தப்படுவது பற்றிய ஐயங்கள்.
ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்கள் பயன்படுத்த முடியாது என்பதால் பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த பலன் கிட்டுமா என்ற ஐயம். இவையெல்லாம் ஒரு பக்கம் என்றால் முக்கியமாக பெரிதுபடுத்தப்படுவது இராமர் பாலமே?
இராமர் பாலம்?மணல், பாறைகளால் ஆன குறுகிய பாலம் இலங்கை மன்னார் தீவையும், இந்தியாவில் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கிறது. கடல் அடியில் பாறைகளின் மேல் அமைந்துள்ள மணல் திட்டுகள், நகரும் தன்மையுடவையாக இருந்தபோதும் இடையே அமைந்துள்ள சிறிய கால்வாய்கள் மணல் திட்டுகளை இணைக்கிறது. இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் இக்கடற்பாறைகள் ராமர் பாலம் மற்றும் ஆதாம் பாலம் என்று அழைக்கப்படுகிறது. 1480ல் ஏற்பட்ட கடும் புயலால் இடையில் கடல் நீர் புகுந்து கடல் நீருக்கு மேலும், கடலுக்கு கீழுமாக இப்பாலம் அமைந்துவிட்டது. இப்பகுதியில் கடல் மட்டத்தின் ஆழம் அதிக பட்சம் நான்கு அடிதான். ராமேஸ்வரத்திலிருந்து 16 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த பாலம் போன்ற அமைந்துள்ள சுண்ணாம்புக் கற்கள்தான் தற்போது சேது சமுத்திரத் திட்டத்தில் மிகப்பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்க சென்ற ராமன், அனுமன் தலைமையில் கடலில் பாலம் அமைத்து சென்றதால் இப்பாலம் வடமொழியில் நளசேது என்றும், தமிழில் திருவனை, ஆதிசேது, ராமசேது என்றும் மற்றும் ஆதாம் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. சிறைவைக்கப்பட்டிருந்த சீதையை மீட்டதும் இராமனே இப்பாலத்தைத் தன்னுடைய வில் மூலம் அம்பெய்து அழித்துவிட்டாராம்.
இப்படிப்பட்ட கற்பனை கதாபாத்திரங்களுக்காக பல கோடி ரூபாய் இலாபம் தரக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதில் உண்ணிப்பாய் இருக்கின்றனர். பா.ஜா.க மற்றும் சங் கூட்டத்தினர்.
அண்மையில் ராமரைப் பற்றியும் ராமாயணத்தைப் பற்றியும் கருத்து தெரிவித்த தமிழக முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்புவதோடல்லாமல் கர்நாடகத்தில் வசித்து வரும் அவருடைய மகளின் வீட்டையும் தாக்கி வன்முறையை நிகழ்த்தியுள்ளனர் இந்த சங் கும்பல்கள்.
மதவெறி பிடித்த முன்னாள் பா.ஜா.க பாராளுமன்ற உறுப்பினர் ராம்விலாஸ் வேதாந்தி ராமாயணம் ஒரு கற்பனைக் கதை அதில் ராமர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று கருத்து தெரிவித்த தமிழக முதல்வரின் தலையைக் கொண்டுவருபவருக்கும், அவரின் நாக்கை அறுப்பவருக்கும் எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்ற கொலைவெறிபிடித்த கருத்துக்களைக் கூறினார். அதைத்தொடர்ந்து ஆங்காங்கே கடையடைப்புகள், கொடிக்கம்பங்கள் சாய்ப்பது, உண்ணாவிரதம், எதிர் கட்சியினரின் அலுவலகங்கள் தாக்கப்படுவது போன்ற பல அசம்பாவிதங்களை ஏற்படுத்தி மக்கள் மற்றும் அரசின் கவனத்தைத் திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன இந்த அமைப்புகள்.
சேது சமுத்திரத் திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ராமர் பற்றிய கருத்துகளை இடம் பெற்றிருந்ததாலும், ராமர் பாலம் பற்றிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர்களால் வட மாநிலங்களில் காங்கிரஸ் வலுவிழந்துவிடும் என்ற பயத்தாலும் காங்கிரஸ் மேலிடம் காங்கிரஸ் தலைவர்களுக்கு சேது சமுத்திரம் மற்றும் ராமர் பாலம் பற்றிய கருத்துகளை யாரும் தெரிவிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.
மதத்தைப் பயன்படுத்தியே மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி அரசியல் ஆதாயம் தேடும் இத்தகைய அரசியல் மற்றும் மதவாதிகளின் மத்தியில் இவர்களது எதிர்ப்பையும் தாண்டி இந்த திட்டம் விரைவில் நிறைவடைந்து செயலுக்கு வரவேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்ப் பார்ப்பு.